

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு விதித்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என்று நியூயார்க்கில் உள்ள அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வரிகள் இனி செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் இந்தப் புதிய வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், இது சட்டரீதியாக நியாயப்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக பிப்ரவரி 2026-இல் இதேபோன்ற வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பிறகு டிரம்ப் அரசு வேறொரு சட்டப் பிரிவின் கீழ் மீண்டும் இந்த 10% வரியைக் கொண்டு வந்தது, தற்போது அதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தீர்ப்பு இந்த வழக்கைத் தொடர்ந்த வாஷிங்டன் மாநிலம் மற்றும் சில சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே நேரடியாகப் பொருந்தும். எனினும், இந்தத் தீர்ப்பு மற்ற இறக்குமதியாளர்களுக்கும் வரிச் சலுகை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.