

கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு இடையே தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர், நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது இயந்திரங்களின் போராக மாறியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து நீடித்து வரும் போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களை உக்ரைன் ராணுவம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஆளில்லா அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் ராணுவம் விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அதிகமாக போர் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளில் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்கு ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோபோக்கள் எல்லைக்கு புறம்பே தோண்டப்பட்டுள்ள ஆழமான குழிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட ரஷ்யா எல்லைகள் வழியாகச் சென்று நிரப்பப்பட்ட வெடிபொருட்களை வெடிக்கச் செய்கின்றன.
இந்த ரோபோக்களை போர்க்களத்தின் பல மைல்கள் தொலைவிற்கு அப்பால் இருக்கும் மனிதர்களால் மிக எளிதாக இயக்க முடியும். இதன்மூலம் கணிசமான அளவில் மனித உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 22,000 க்கும் அதிகமாக ஆளில்லா இயந்திரங்களை உக்ரைன் வாங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் ஒரு சிப்பாயைக் கூட போர்க்களத்திற்கு அனுப்பாமல், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி ஒரு ரஷ்யா நிலையைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
போர் முன்னணி நிலைகளில் வெடிபொருட்கள், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு செல்லவும், காயமடைந்த வீரர்களை வெளியேற்றவும், உளவுப் பணிகளை மேற்கொள்ளவும் ஆளில்லா ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.
வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் ரோபோக்கள், வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் வெடிச் சத்தத்தை கேட்டு அங்கிருந்து நகர்ந்து செல்வதால், அவற்றை ‘மெளன மரணம்’ என்று ரஷ்யா படையினர் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.