

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தாம் பேசவில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், சீனாவுடன் அமெரிக்கா "மிக நல்ல உறவைப்" பகிர்ந்து கொள்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தியதோடு, தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதல் முடிவுக்கு வர வேண்டும் என ஷி விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "சீனாவுடன் எங்களுக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது. மேற்கு ஆசிய போர் முடிவுக்கு வர வேண்டும் என ஜி ஜின் பிங் விரும்புகிறார்," என்று டிரம்ப் மேலும் கூறினார்.
அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் மற்றும் சீனாவுடன் தகவல் தொடர்பு குறித்து சி.என்.என். எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், "இந்த விவகாரம் தொடர்பாக தான் ஜி ஜின் பிங்குடன் நேரடியாகப் பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால், தெஹ்ரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கினால் பெய்ஜிங் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், ஒத்திவைக்கப்பட்டிருந்த தனது சீன பயணம் அடுத்த மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட ஒரு விரிவான பதிவில், டிரம்ப் திருத்தப்பட்ட கால அட்டவணையை உறுதிப்படுத்தியதோடு, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பரஸ்பர இராஜதந்திர ஈடுபாட்டிற்கான திட்டங்களையும் கோடிட்டுக் காட்டினார்.
"ஈரானில் எங்களின் ராணுவ நடவடிக்கை காரணமாக முதலில் ஒத்திவைக்கப்பட்டிருந்த, சீனாவின் மிகவும் மதிக்கப்படும் அதிபர் ஜி ஜின்பிங்குடனான எனது சந்திப்பு, மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெய்ஜிங்கில் நடைபெறும். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில், அதிபர் ஜி மற்றும் திருமதி பெங் ஆகியோரை வாஷிங்டன், டி.சி.யில் நடைபெறும் ஒரு பரஸ்பர பயணத்திற்கு நானும் மெலனியாவும் வரவேற்போம்," என்று அவர் தெரிவித்தார்.