

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக, மத்திய கிழக்கில் நாங்கள் முன்னெடுத்திருந்த மாபெரும் ராணுவ நடவடிக்கைகளை முடித்து கொள்ளும் சூழலை பரிசீலித்து வருகிறேன். ஏனென்றால் எங்களது இலக்குகளை அடைவதற்கு நாங்கள் மிக நெருக்கமாக வந்துவிட்டோம்.
ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் நாடுகளே, தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து, கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் . அதை அமெரிக்கா செய்யாது. அந்த நாடுகள் கோரிக்கை விடுத்தால் நாங்கள் உதவுவோம்.
ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அத்தகைய உதவிக்கான தேவை இருக்காது. அந்த நாடுகளுக்கு இது ஒரு எளிமையான ராணுவ நடவடிக்கையாகவே அமையும்
இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க தங்களது படைகளை அனுப்ப மறுத்த நேட்டோ நாடுகளை டிரம்ப் மீண்டும் விமர்சித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவாத நாடுகள் கோழைகள். இதை அமெரிக்கா நினைவில் வைத்திருக்கும். அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ அமைப்பு வெறும் காகித புலிதான்.
ஈரானுடனான போரில் உதவாத அவர்கள் எண்ணெய் விலை உயர்வை பற்றி புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் உதவ மறுக்கிறார்கள்.
ஈரானுடன் போர்நிறுத்தம் செய்ய நான் விரும்பவில்லை. எதிர்தரப்பை நீங்கள் முற்றிலுமாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர் நிறுத்தம் எதையும் நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்" என்றார்.