

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் 6 வாரங்கள் நீடித்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே இரு நாடுகள் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி இருந்து வருகிறது. ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரத்தில் உடன்பாடு எட்டவில்லை.
ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
மேலும் அடுத்த வாரம் தாக்குதல் தொடங்கப்படலாம் என்று சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழலில், டிரம்ப் தனது வார இறுதி திட்டத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பி உள்ளார்.
வார இறுதி விடுமுறையில் நியூஜெர்சிக்கு செல்ல டிரம்ப் திட்டமிட்டிருந்தார். திடீரென்று அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரமாக பரிசீலித்து வருவ தாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக சி.பி.எஸ். நியூஸ் ஊடகம் கூறும் போது, அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது புதிய சுற்று ராணுவ தாக்குதல்க ளுக்குத் தயாராகி வருகிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் பெரிய புதிய நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல் அளிக்க அதிகளவில் முனைப்புடன் இருக்கிறார் என்றும் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே டிரம்ப் தனது தேசியப் பாதுகாப்புக் குழுவினருடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில் ஈரான் தனது வான்வெளியின் சில பகுதிகளை மூடி உள்ளது. அந்நாட்டின் மேற்கு வான் வெளியில் சில பகுதிகளை 25-ந்தேதி காலை வரை மூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை மீண்டும் மோதல் தொடங்கும் என்ற தகவலுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. மேலும் ஈரான் ராணுவம் அமெரிக்காவுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு தயாராகி வருவதாக ஈரான் அரசின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில்,”ஒப்பந்தம் தொடர்பாக உயர்மட்ட மத்தியஸ்தம் இருந்தபோதிலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான செயல்பாட்டு மற்றும் சித்தாந்த ரீதியான இடைவெளிகள் ஆழமாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் நீடிக்கின்றன.
பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு இறுதித் தீர்வுக்கு நெருங்க வில்லை என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து உள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது.