வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்கிய அமெரிக்கா!

மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும்.கொள்கைக்கு விரோதமான பதிவுகள் கண்காணிக்கப்படும்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்கிய அமெரிக்கா!
Published on

அதிபர் டிரம்ப் கெடுபிடிகளால் அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான டிரம்ப்பின் சண்டைக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது.

மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

இதனால், அமெரிக்காவில் படிப்பு என்ற கனவில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும் என்றும் அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில், அமெரிக்காவுக்கு விரோதமாகவோ, அதன் அரசாங்கம், கலாசாரம், அமைப்புகள், அடிப்படை கொள்கை ஆகியவற்றுக்கு விரோதமாகவோ ஏதேனும் பதிவுகளோ, செய்திகளோ இருக்கிறதா என்று தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

ஒவ்வொரு தூதரக அதிகாரியும் தணிக்கை அதிகாரிகளாக செயல்படுவார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில் 15% குறைவான வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com