

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "இந்த ரகசியங்களை அமெரிக்க மக்கள் நேரடியாகப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
இந்தக் கோப்புகளில் 1940-களில் இருந்து சேகரிக்கப்பட்ட UFO அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக1947ஆம் ஆண்டு பதிவான பறக்கும் தட்டுகளைப் பற்றிய அறிக்கைகள், 1969ல் அப்போலோ 12 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் படம்பிடித்த மர்மமான நிகழ்வின் புகைப்படம், 1972ல் அப்போலோ 17 விண்வெளி வீரர்கள் கண்ட அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து அவர்கள் பேசிய உரையாடல்கள் இதில் அடங்கியுள்ளன.
இருப்பினும் நேற்று வெளியான சுமார் 160 கோப்புகளை ஆய்வு செய்த நிபுணர்கள், இதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறுகின்றனர்.
UFO ஆய்வாளர் மிக் வெஸ்ட் கூறுகையில், "வெளியான வீடியோக்களில் காணப்படும் உருவங்கள் கேமரா லென்ஸ் கோளாறாகவோ அல்லது தொலைதூர ஒளிப்புள்ளிகளாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம்," எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சர்ச்சைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ள கூடுதல் தகவல்கள் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.