இலங்கை நெருக்கடி: மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
Published on

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.

அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது.

இந்நிலையில்,  இதுதொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் இந்த வேளையில், நமது பொது மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வன்முறை மேலும் வன்முறையைதான் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார தீர்வொன்று தேவை. அதனை தீர்க்க தமது அரசு அர்ப்பணிப்புடன்  உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com