இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்- அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே ஆதரவு

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே
Published on

கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. 

இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர்.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவருக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவருக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதாக மகிந்த ராஜபக்சேயின் கட்சியும் அறிவித்து உள்ளது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளும், மக்களும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தபோவதாகவும் அறிவித்துள்ளனர். போராடும் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்‌சே பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் போராட்டத்திற்கு புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘வீட்டுக்கு செல்  கோத்தா’ என்ற போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பொறுப்பும் அவர்களுக்கு உண்டாகும்.

இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com