Spelling Bee போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது மாணவர் வெற்றி

ஷ்ரே பரிக் 90 வினாடிகளில் 32 வார்த்தைகளைச் சரியாக எழுத்துக்கூட்டி சொல்லி முதலிடம் பிடித்தார்.
Shrey Parikh
Published on

அமெரிக்காவில் ஆண்டுதோறும் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு வார்த்தையை நடுவர்கள் கூறுவார்கள். அந்த வார்த்தையின் எழுத்துக்களை போட்டியாளர்கள் சரியாக சொல்ல வேண்டும்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் அமெரிக்கா, ஐரோப்பா, பஹாமாஸ், கனடா, கானா, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 247 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த 3 நாளாக இப்போட்டி நடந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு 9 பேர் தகுதி பெற்றனர்.

இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஷ்ரே பரிக் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் 90 வினாடிகளில் 32 வார்த்தைகளைச் சரியாக எழுத்துக்கூட்டி சொல்லி முதலிடம் பிடித்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் ஷ்ரே பரிக், கடந்த 2024-ம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்த ஷ்ரே பரிக்குக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஒரு நினைவுப் பதக்கம், ஸ்கிரிப்ஸ் கோப்பை ஆகியவை வழங்கப்பட்டன.

இரண்டாவது இடத்தை நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஈஷான் குப்தா பிடித்தார். அவர் 90 வினாடிகளில் 25 வார்த்தைகளைச் சரியாக எழுத்துக் கூட்டி சொன்னார். 3-வது இடத்தை ஜார்ஜியாவைச் சேர்ந்த 12 வயது சர்வ தாராவனே பிடித்தார்.

அமெரிக்காவில் நடந்து வரும் இந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com