

ஆடம்பர உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அவற்றுக்காக கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள ‘பொஸ்ஸா’ என்ற ஆடம்பர உணவகத்தில், பிறந்தநாள் கொண்டாட வந்த வாடிக்கையாளர்களுக்கு கேக் வெட்டுவதற்காக மட்டும் 110 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10,656 ) கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஜஸ்டின் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் பகிர்ந்த ஓட்டல் பில்லின் புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இந்த கூடுதல் கட்டணத்திற்கு கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உணவு, வரிகள் மற்றும் டிப்ஸ்களுக்காக பெருமளவு பணத்தை செலுத்துகின்றனர். இந்நிலையில், கேக் வெட்டுவதற்கு ஒரு நபருக்கு 10 டாலர் வீதம் வசூலிப்பது நியாயமற்றது என்று விமர்சித்தனர்.
இந்த சர்ச்சை தீவிரமானதை தொடர்ந்து, அந்த உணவகம் இன்ஸ்டாகிராம் மூலம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதோடு, உரிய விளக்கத்தையும் அளித்துள்ளது. அதில், கேக் வெட்டும் கட்டணம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கத் தவறியது எங்களின் சேவைத் தரத்திற்கு முரணானது என்பதால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அந்த கட்டணத்தை முழுமையாக திரும்பத் தருகிறோம் என கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களின் தவறை திருத்திக்கொள்ளும் விதமாக, கேக் வெட்டுவதற்கான கட்டணத்தை இனி ஒரு நபருக்கு 10 டாலரில் இருந்து 5 டாலராக பாதியாக குறைப்பதாகவும் அந்த உணவகம் அறிவித்துள்ளது.