

இந்தியா தனது போர் விமானங்களின் இருப்பில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 4.5 தலைமுறை ரஃபேல் போர் விமானங்களை படையில் இணைத்து வருகிறது.
இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஏற்கனவே 62 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மேலும் 114 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட ரஃபேல் விமானங்களை இந்தியா பெறக்கூடும்.
சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா தொடங்கியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளராக ராஜேஷ் குமார் சிங் கடந்த 2024-ஆம் ஆண்டு பதவியேற்ற உடனேயே இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இந்த நிலையில் தற்போது ரஃபேல் விமானங்களை 50 சதவீத உள்நாட்டுமயமாக்கலுடன் இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் அளித்த பேட்டியில், “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் இந்திய நிறுவனமும் இணைந்து இந்தியாவில் தயாரிப்பு பணியில் ஈடுபடும்.
சுமார் 90 முதல் 94 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், மீதமுள்ள விமானங்கள் பிரான்சிலிருந்து நேரடியாக வாங்கப்படும்.
பிரான்சிற்கு வெளியே அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம், போர் விமானங்களை விரைவாக இந்திய படையில் இணைக்க முடியும்” என்று தெரிவித்தார்.