

2019இல் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சதிக்காரர்களில் ஒருவன் ஹம்சா பர்ஹான்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் ஹம்சா பர்ஹான் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பல துப்பாக்கிச் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பித்து ஓடியது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான அர்ஜுமந்த் குல்சார் தார் என்ற ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'அல்-பத்ர்' பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதியாகச் செயல்பட்டு வந்தான்.
2019 பிப்ரவரி 14 அன்று ஜெய்ஷ்-ஏ-முகமது தற்கொலைப் படை பயங்கரவாதி ஆதில் அகமது தார், சிஆர்பிஎஃப் வாகனத்தின் மீது வெடிகுண்டு காரை மோதிய போது, அதற்குப் பின்னணியில் இருந்து தளவாட மற்றும் தகவல் தொடர்பு உதவிகளை வழங்கியவர்களில் ஹம்சாவும் ஒருவன்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. 2022-ல் இந்திய மத்திய அரசு இவனை UAPA சட்டத்தின் கீழ் 'அதிகாரப்பூர்வ பயங்கரவாதி' என அறிவித்தது.
பாதுகாப்புப் படையினரின் கூற்றுப்படி, ஹம்சா பர்ஹான் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு காஷ்மீர் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதைக்கு இழுப்பது, டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரப் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்புவது போன்ற 'மூளைச்சலவை' பணிகளின் முக்கிய மூளையாகச் செயல்பட்டு வந்தான்.
இவனது மரணம் காஷ்மீரில் பயங்கரவாத ஆள்சேர்ப்புப் பணிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி .
தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வரும் சம்பவங்களின் ஒரு பகுதியாகவே இந்த கொலையும் பார்க்கப்படுகிறது.
தற்போது அந்த பகுதியில் உள்ள போலீசார் கொலையாளிகள் யார் என்பதை வலை வீசி தேடியும், சுற்றி வளைத்தும் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.