Project Freedom: ஹார்முஸில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்க அமெரிக்கா புது Mission

கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 126 டாலரைத் தாண்டியது.
Project Freedom: ஹார்முஸில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்க அமெரிக்கா புது Mission
Published on

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுப் கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்க, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு Project Freedom என்ற பெயரில் புதிய மீட்பு நடவடிக்கையை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து பல கப்பல்கள் சிக்கியுள்ளன.

வாரக்கணக்கில் கடலில் தவிப்பதால், கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மோதலில் சிக்கிக்கொண்ட "அப்பாவி மக்களை" மீட்பதற்கான மனிதாபிமான முயற்சி இது என்று டிரம்ப் விவரித்துள்ளார்.

இந்த மீட்புப் பணியில் யாரேனும் குறுக்கீடு செய்தால், அவர்கள் மீது ராணுவ பலம் பிரயோகிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தகவல்படி, சுமார் 15,000 வீரர்கள், ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகத்தான் நடக்கிறது.

போர் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 126 டாலரைத் தாண்டியது. தற்போது விலை சற்றே குறைந்திருந்தாலும், இன்னும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது.

அமெரிக்காவிலும் உலக அளவிலும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது டிரம்ப் நிர்வாகத்திற்கு உள்நாட்டிலும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

ஒருபுறம் ராணுவ நடவடிக்கை இருந்தாலும், ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com