

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்கா கெடு விதித்துள்ளது. ஒப்பந்தத்தில், ஈரான் கையெழுத்திட மறுக்கும் பட்சத்தில் நாகரீகமே அழிந்து போகும் வகையில் மிக கொடூர தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் டிரம்ப் எச்சரிக்கைக்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும், கண்டனக்குரல் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப்-க்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள், எதிர்காலத்தில் உறுதியான முடிவுகளுக்கு வழிவகுக்கும் ஆற்றலுடன், சீராகவும், வலுவாகவும், சக்திமிக்கதாகவும் முன்னேறி வருகின்றன. இராஜதந்திரம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கும் வகையில், காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அதிபர் டிரம்ப்பிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்லெண்ணத்தின் அடையாளமாக, ஈரானிய சகோதரர்கள் ஹார்முஸ் ஜலசந்தியை அதற்கேற்ற இரண்டு வார காலத்திற்கு திறக்குமாறு பாகிஸ்தான் முழு மனதுடன் கேட்டுக்கொள்கிறது. மேலும், பிராந்தியத்தில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நலனுக்காக, போரை இராஜதந்திரம் மூலம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, போரிடும் அனைத்து தரப்பினரும் எல்லா இடங்களிலும் இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.