search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா

    • வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார்.
    • அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்கிறது.

    தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி நடத்துவதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஏவுகணை சோதனையை நடத்துகிறது.

    இந்த நிலையில் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ உள்ளது. இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும் திட்டமிட்டபடி அதை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை பெறுவது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

    மேலும் உளவு தகவல்களை சேகரிக்கும் திறனை உறுதியாக நிலைநிறுத்த வடகொரியா பல செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும்.

    அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன. விமானம் தாங்கி கப்பல்கள், அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்கள் போன்றவற்றை நிலைநிறுத்துவதன் மூலம் தென்கொரியாவை ஆக்கிரமிப்புக்கான மேம்பட்ட தளமாக அமெரிக்கா மாற்றியுள்ளது என்றார்.

    சமீபத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு போர் பயிற்சியை தொடங்கிய நிலையில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை ஏவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×