

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான வைர வியாபாரி நீரவ் மோடி தனது நிறுவனம் மூலம் இந்திய வங்கிகளில் அதிக கடன் வாங்கிவிட்டு திரும்பி செலுத்தாமல் கடந்த 2018 இல் வெளிநாடு தப்பிச் சென்றார்.
55 வயதான நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் அமெரிக்க டாலர் மதிப்பில் 2.2 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கு அவர் மீது உள்ளது.
இதனிடையே பேங்க் ஆஃப் இந்தியாவில் வாங்கிய கடன் குறித்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த லண்டன் உயர் நீதிமன்றம் , தனது நிறுவனங்களில் ஒன்று வாங்கிய கடனுக்கு அளித்த தனிநபர் உத்தரவாதத்தின் பேரில், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு 10.7 மில்லியன் டாலர் (100 கோடி ரூபாய்க்கும் மேல்) செலுத்த நீரவ் மோடி கடமைப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
வங்கிக்குச் செலுத்த வேண்டிய 4.1 மில்லியன் டாலர் (சுமார் 38.9 கோடி ரூபாய்) அசல் தொகைக்கும், வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டிக்கும் நீரவ் மோடி தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார் என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைமன் டிங்க்லர் தெரிவித்தார்.