

ஐரோப்பாவின் தொலைதூரப் பகுதிகளை அடையக்கூடிய ஏவுகணைகளை ஈரான் உருவாக்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரான் சமீபத்தில் ஏவிய ஏவுகணைகள் தங்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய திறன்களை வெளிப்படுத்தியுள்ளன என்றும் அந்த ஏவுகணைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளை அடையக்கூடியவை என்றும் கூறினார்
மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பையும் குறிவைக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஈரானின் அணுசக்தி திறன் குறித்து பேசிய அவர், "ஈரான் ஏற்கனவே யுரேனியத்தை 60 சதவீதம் தூய்மையான அளவு செறிவூட்டியுள்ளது.
வெறும் 12 முதல் 14 நாட்களில் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான அளவு அதன் தூய்மையை 90 சதவீதமாக அதிகரிக்க முடியும்.
60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கு அணுகுண்டு பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்திற்கு ஒரு கேடயமாக மேம்பட்ட ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்காகவே இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று ரூபியோ கூறினார்.
ஈரான் விமானப்படை, கடற்படையை, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் டிரோன், ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆகிய நான்கு இலக்குகளை அழிக்கவே இந்த நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறிய அவர், இலக்கிற்கு மிக அருகில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பேச்சுவார்த்தையின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தங்கள் ராணுவ தளங்களை அமெரிக்காவுக்கு வழங்க மறுத்ததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அவற்றை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.