

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய முன்னணி சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தனது உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புப் பறிப்பு அரங்கேறியுள்ளது.
மெட்டா நிறுவனம் தனது மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேரை, அதாவது 8,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 125 பில்லியன் டாலர் முதல் 145 பில்லியன் டாலர் வரை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.
மனித உழைப்பைக் குறைத்து, AI மூலம் பணிகளை எளிதாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடையே நேரடிப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, மெட்டா நிறுவனம் அன்றைய தினம் அனைவரையும் "வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு" உத்தரவிட்டது.
பின்னர் அதிகாலை 4 மணி அளவில் பணிநீக்கத்திற்கான மின்னஞ்சல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது. 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி, நிறுவனத்தில் ஏற்கனவே காலியாக இருந்த 6,000 புதிய வேலைவாய்ப்பு இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 7,000 ஊழியர்கள் புதிய AI சார்ந்த பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரங்களுக்கான (4 மாதங்கள்) அடிப்படைச் சம்பளமும், அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் கூடுதலாக 2 வாரச் சம்பளமும், 18 மாதங்களுக்கான குடும்ப மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.
தங்களது கணினிச் செயல்பாடுகள் மற்றும் மவுஸ் நகர்வுகளைக் கண்காணித்து, அதன் மூலமே புதிய AI மாடல்களுக்கு மெட்டா நிறுவனம் பயிற்சி அளித்து வந்ததாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "எங்களது உழைப்பை வைத்தே எங்களை வேலைநீக்கம் செய்யும் AI-ஐ உருவாக்கியுள்ளனர்" என்று ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.