

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூ யார்க்கின் மான்ஹாட்டன் சிறையில் தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த உலகின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் வெளியானதால் இந்த வழக்கு உலகத்தையே உலுக்கியது.
இந்நிலையில் அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றம் இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீனுடன் ஒரே சிறை அறையில் இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும், கொலைக் குற்றவாளியுமான நிக்கோலஸ் டார்டாக்லியோன், இந்தச் சிறுகுறிப்பைக் கண்டெடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மன்ஹாட்டன் சிறைச்சாலையில் எப்ஸ்டீன் இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர் கண்டெடுத்ததாக நீதிமன்றம் வெளியிடப்பட்ட தற்கொலை கடிதத்தில் எப்ஸ்டீன் எழுதியிருப்பதாவது,
"அவர்கள் பல மாதங்களாக என்னைப் பற்றி விசாரணை நடத்தினார்கள். ஆனால் எதையும் கண்டுபிடிக்கவில்லை! அதன் விளைவாக 15 ஆண்டுகள் பழமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
பிரியாவிடை பெறுவதற்கான நேரத்தை ஒருவரே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு வரம். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். கதறி அழ வேண்டுமா!! அதில் வேடிக்கை எதுவும் இல்லை!" என்று தெரிவித்தார்.
அவர்கள் பல மாதங்களாக என்னைப் பற்றி விசாரணை நடத்தினார்கள், ஆனால் எதையும் கண்டுபிடிக்கவில்லை" என்று அந்தக் கடிதத்தில் எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தற்கொலைக் குறிப்பு மீண்டும் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.