

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை தொடங்கியது. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8இல் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டது. அது 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற்றன. அதன்பின் கத்தார் தலைநகர் தோஹாவில் அண்மையில் நடந்து வந்தது.
அணு ஆயுதத்தை தயாரிக்க தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஏற்றுமதி கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பதால் நிரந்தர போர் நிறுத்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
புதிய போர் நிறுத்தம்
இந்த சூழலில் நிலைமையை சுமூகமாக்கும் வகையில் ஈரான் - அமெரிக்கா இடையே மேலும் 60 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் சம்மதத்துடன் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டால் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள முக்கிய ஈரானிய நகரமான பந்தர் அபபாஸ் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்கியது.
இதனால் நிலைமை மீண்டும் மோசமான நிலையில் இன்று பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகள் இந்த புதிய உடன்படிக்கைக்கு சம்மதித்துள்ளனர். இறுதி முடிவு டிரம்ப் கையில் இருக்கிறது. இந்த 60 நாள் அவகாசத்தை பயன்படுத்தி நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடரும்.