அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹார்முஸில் யாருக்கும் அனுமதி இல்லை.. பேச்சுவார்த்தையும் இல்லை - ஈரான்

ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹார்முஸில் யாருக்கும் அனுமதி இல்லை.. பேச்சுவார்த்தையும் இல்லை - ஈரான்
Published on

அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட ஜலசந்திக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் எதிரியாகக் கருதப்பட்டுத் தாக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

சனிக்கிழமையன்று ஜலசந்திக்கு அருகே 'ஜக் அர்னவ்' மற்றும் 'சன்மர் ஹெரால்டு' என்ற இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது போர் நிறுத்த மீறல் என டிரம்ப் விமர்சித்தார். தங்கள் நாட்டு கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து IRGC தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கப்பல் உரிமையாளர்கள் IRGC வழங்கும் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் என அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் அப்படி எந்த திட்டமும் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று, ஈரானுக்கு இது கடைசி வாய்ப்பு, ஒப்பந்தத்துக்கு வராவிட்டால் ஈரானின் உள்கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, அணு ஆயுதத்திற்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்டவற்றில் உள்ள கருத்து வேறுபாட்டால் கடந்த வாரம் பாகிஸ்தானில் இரு நாடுகள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதைத் தொடர்ந்து ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகை இடும் என டிரம்ப் அறிவித்தார்.

ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட 2 வார போர் நிறுத்ததில் ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை என்றால் மீண்டும் முழு அளவிலான போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com