

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், எண்ணெய் வளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் ஈரான் ஆக்ரோஷமாக தாக்கி வருகிறது. மேற்கு ஆசிய போர் 31-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியது.
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து குவைத்தில் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சக செய்தி தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குவைத் அரசுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டது. இதில் ஒரு இந்திய தொழிலாளி உயிர் இழந்தார். அந்த கட்டிடத்தில் இருந்த கணிசமான பொருட்கள் சேதம் அடைந்தது.
பாவகரமான ஈரானின் ஆக்கிரமிப்பு கண்டினத்திற்குரியது. சேதங்களை கட்டுப்படுத்தவும், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதையும் உறுதி செய்யும் வகையில் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
குவைத்தில் இந்தியர் உயிரிழந்ததற்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது. சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவியையும் வழங்குவதற்காக குவைத் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.