இந்திய பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது - நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் பாலேந்திர ஷா பரபரப்பு பேச்சு

எல்லைப் பிரச்சனையின் வேர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், இந்த விவகாரத்தை பிரிட்டன் அரசிடம் கொண்டு செல்வோம்.
இந்திய பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது - நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் பாலேந்திர ஷா பரபரப்பு பேச்சு
Published on

நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதில், நீண்ட காலமாக நீடித்து வரும் இரு நாட்டு எல்லைப் பிரச்சனை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய பாலேந்திர ஷா, இந்தியப் பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது, "லிபுலேக் உள்ளிட்ட நேபாளப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளது குறித்து நேபாள அரசு ஏற்கனவே இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது, அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து பதிலும் கிடைத்துள்ளது.

நேபாள நிலத்தை இந்தியா மட்டும் ஆக்கிரமிக்கவில்லை; நேபாளமும் இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியாவுடன் எப்போதும் ஒரு சுமுகமான மற்றும் இணக்கமான உறவைப் பேணவே தனது அரசு விரும்புவதாகவும், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி வழியிலேயே பிராந்திய எல்லைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த எல்லைப் பிரச்சனையின் வேர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், இந்த விவகாரத்தை பிரிட்டன் அரசிடமும் தனது அரசு கொண்டு செல்லும் என்றும் பாலேந்திர ஷா தெரிவித்தார்.

பின்னணி:

இந்தியாவும் நேபாளமும் சுமார் 1,751 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்த எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.

இதில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இப்பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன.

சர்ச்சைக்குரிய இப்பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதி என்பதில் இந்தியத் தரப்பு உறுதியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com