

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் உடைந்து தூள் தூளாகியுள்ளது.
போர் தற்போது அதன் 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் நேரடியாக மோதும் ஒரு மகா யுத்தமாக மாறியுள்ளது.
பாதுகாப்புச் சூழல் மிக மோசமடைந்துள்ளதால், ஈரானில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்ற மத்திய அரசு மிக முக்கியமான அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று தனது 8-வது அவசர எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியக் குடிமக்கள் யாரும் தற்போதைக்கு ஈரான் நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் என அனைவரும், அங்கு பொதுப் போக்குவரத்து மற்றும் ஓரளவுக்கு விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் போதே உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆணையை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் எல்லைகள் வழியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னமும் 7,500 இந்தியர்கள் ஈரானில் சிக்கியுள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசர உதவி எண்களைத் தொடங்கியுள்ளது.
இந்த போர்ச் சூழல் குறித்து ஈரானிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்தும் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கும், உலகப்போர் போன்ற சூழலை உருவாக்கியதற்கும், இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்காவே முழுப் பொறுப்பு" என்று மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் வான்படை இன்று ( ஜூன் 8) அதிகாலை ஈரானின் எல்லைக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான், தப்ரிஸ் ஆகிய முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
ஈரான் அரசு தனது நாட்டின் வான்வெளியை உடனடியாக மூடி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. தலைநகரின் முக்கிய சர்வதேச விமான நிலையமான 'இமாம் கமேனி விமான நிலையம்' மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்திற்கான 'மெஹ்ராபாத் விமான நிலையம்' ஆகியவற்றின் அனைத்து விமானச் சேவைகளும் மறு உத்தரவு வரும்வரை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே நேரத்தில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்படும் 'ஹவுதி' கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினர். ஆனால், அதை இஸ்ரேலின் 'அயன் டோம்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானில் தடுத்து அழித்தன.