

ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஈரானில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். நீண்ட காலமாக நாங்கள் வைத்த பல இலக்குகள் ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசி உண்டாகட்டும்.
ஈரான் நாட்டின் முக்கிய ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற விரும்புகிறோம். பெரும் படைகளின் துணையுடன் அங்குள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற விரும்புகிறேன். இது தொடர்பாக பலவிதமான ராணுவ திட்டங்களை ஆலோசித்து வருகிறோம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஈரானில் இருந்து எண்ணெயை எடுத்துக் கொள்வதுதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், நீங்கள் ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள்தான் முட்டாள்கள்.
ஒருவேளை நாங்கள் கார்க் தீவை கைப்பற்றலாம். அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால் நாங்கள் அங்கேயே (கார்க் தீவு) சில காலம் தங்க வேண்டி இருக்கும்.
ஈரானிடம் அங்கு எந்த பாதுகாப்பும் இருப்பதாக நான் நம்பவில்லை. இதனால் நாங்கள் மிக எளிதாக கைப்பற்றி விட முடியும்.
தொடர் மோதல்களுக்கு மத்தியில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம்.
பாகிஸ்தான் மூலமாக நடைபெற்ற ஈரானின் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்களை வெளியிட முடியாது.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
இதுவரை ஈரான் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்த தற்போது திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயிற்சி பெற்ற 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 2200 கடற்படை வீரர்கள் உள்பட 3500 வீரர்கள் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு எல்லா வகையிலும் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.