ஹார்முஸை திறப்பது கட்டாயம்.. ஈரானில் அமெரிக்க தாக்குதலுக்கு மத்தியில் ரூபியோ திட்டவட்டம்

எரிபொருள் வரத்து குறைந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
ஹார்முஸை திறப்பது கட்டாயம்.. ஈரானில் அமெரிக்க தாக்குதலுக்கு மத்தியில் ரூபியோ திட்டவட்டம்
Published on

3 நாள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வருகை தந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு, ஈரான் போர் விவகாரம் குறித்து ரூபியோ பேட்டி அளித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொய்வுடன் நடைபெற்று வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும் என ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிபொருள் வரத்து குறைந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இந்த நிலை நீடித்தால் பெரும் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளை பீடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே அமெரிக்காவுக்கும் இந்த விவகாரத்தை விரைந்து தீர்க்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ஹார்முஸ் அருகே தெற்கு ஈரானில் அமைந்துள்ள பந்தர் அபபாஸ் நகரம் அருகே அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜெய்ப்பூரில் பேசிய ரூபியோ, "கத்தாரில் தற்பொழுது சில முக்கிய விவாதங்கள் நடந்து வருகின்றன. முன்மொழிவை இறுதி செய்வது குறித்து இருதரப்பிலும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

உடன்பாட்டையை எட்டவே அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால் அவர் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மட்டுமே செய்வார்; இல்லையெனில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்ய மாட்டார்.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும். அது ஒரு வழியில் இல்லையென்றால் மற்றொரு வழியில் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதன்மூலம் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என ரூபியோ மறைமுகமாக குறிப்பிட்டதாக கருதப்படுகிறது.

"ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும்" என ரூபியோ தெரிவித்துள்ளதும் ஹார்முஸ் அருகே உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அபபாஸில் அமெரிக்கா தாக்குதல் நடாத்தியுள்ளதும் ஒப்புநோக்கத்தக்கது.

ஈரான் கடற்படை மற்றும் விமானப்படைத் தளம் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com