

தென் ஆப்ரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து எம்.வி. ஹோண்டியஷ் என்ற உல்லாச சுற்றுலா கப்பல் ஆப்ரிக்காவில் கேப் வெர்டே நோக்கி பயணித்தது.
இந்தக் கப்பல் ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்டு, பல்வேறு வனப்பகுதிகளில் நங்கூரமிட்டுச் சென்றபோது ஹண்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் எலிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளை சேர்ந்த 149 பயணிகள் இந்த கப்பலில் பயணித்தனர். மேலும் கப்பல் மாலுமிகளில் இருவர் இந்தியர்கள் ஆவர்.
இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயண வழியிலேயே சிலர் தத்தமது நாடுகளுக்கு திரும்பிய நிலையில் அவர்கள் மூலம் வைரஸ் பலருக்கு பரவியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
நெதர்லாந்தில் 3 பேர், சிங்கப்பூரில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளன.
அடுத்த சில வாரங்களில் கூடுதல் வழக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாக உலகச் சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
கப்பலில் பயணித்த 2 இந்திய மாலுமிகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களின் நிலைமை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கப்பல் தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மீதமுள்ள பயணிகள் அனைவரும் அவரவர் அறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.