கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரையின் போது மாணவர்கள் வெளிநடப்பு..

இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகளுடனான கூகுளின் ‘புராஜெக்ட் நிம்பஸ்’ ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்..
Sundarpichai
Published on

அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (ஜூன் 14) நடைபெற்றது.

இதில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், அரங்கில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென எழுந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏன் போராட்டம்?..

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் கூகுள் நிறுவனம் வைத்துள்ள தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, இஸ்ரேல் அரசுக்கு கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘புராஜெக்ட் நிம்பஸ்' என்ற கிளவுட் தொழில்நுட்பம், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

‘பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள்’ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த வெளிநடப்பை ஒருங்கிணைத்தன.

சுந்தர் பிச்சையின் உரை..

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பதற்றமடையாமல் சுந்தர் பிச்சை தனது உரையைத் தொடர்ந்து முடித்தார்.

தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆழமான விவாதங்கள் மாணவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருவதால், அவர் தொழில்நுட்பக் கருத்துக்களைத் தவிர்த்து, பட்டதாரிகளுக்கான பொதுவான வாழ்க்கை ஆலோசனைகளை மட்டுமே வழங்கினார்.

தனது உரையில் நகைச்சுவையாகப் பேசிய அவர், "இன்று உங்களுக்கு அறிவுரை வழங்குவது பற்றி எனக்கு நிறைய பேர் அறிவுரை வழங்கினார்கள்.

முக்கியமாக, எதைப் பேசக்கூடாது என்பதில் தான் அவர்கள் குறியாக இருந்தார்கள்" என்று குறிப்பிட்டார். மேலும், தனது பெயரின் இறுதி எழுத்துக்களை (AI - Pichai) சுட்டிக்காட்டி கலகலப்பாகப் பேசினார்.

எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த கவலை..

தற்போது அமெரிக்காவில் ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களின் வருகையால், ஏஐ தொழில்நுட்பம் காரணமாகப் புதிய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் நிலவுகிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

ஆனால், இதுகுறித்து என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் பேசுகையில், "பல நிறுவனங்களின் சிஇஓ-க்கள் தங்களது ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு 'ஏஐ தொழில்நுட்பத்தை' ஒரு சோம்பேறித்தனமான சாக்காகப் பயன்படுத்தி மறைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

பழைய மாணவர்..

சுந்தர் பிச்சை இதே ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு தலைமுறை பட்டதாரிகள் ஏஐ தொழில்நுட்பத்தின் பெரும் மாற்றங்களுக்கு நடுவே வாழவும், அதை உருவாக்கவும் போகிறார்கள் என்று அவர் தனது உரையில் நம்பிக்கையை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com