

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. மாலியில் ஜெனரல் அசிமி கோயிட்டா தலைமையிலான ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாலி நாட்டின் தலைநகர் பமாக்கோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஆயுதமேந்திய கிளர்ச்சியார்கள் ராணுவ முகாம்களை குறிவைத்து நேற்று பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அசாவாத் விடுதலை முன்னணி (FLA) மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய JNIM ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
தலைநகர் பமாக்கோ, நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள காவோ, கிடல் மற்றும் மத்திய நகரங்களான செவாரே, மொப்தி ஆகிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
இதன் விளைவாக பமாக்கோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிடல் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக FLA தெரிவித்துள்ளது. காவோ நகரின் ராணுவ முகாம்களில் இன்னும் சண்டை நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலி ராணுவம் இந்தத் தாக்குதல்களை முறியடித்து வருவதாகவும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்திய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் மாலியின் காட்டி மற்றும் பிற பகுதிகளில் பதிவான தாக்குதல்கள் காரணமாக, மாலியில் வசிக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும், வீட்டிலேயே இருக்கவும், மாலி அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளது.