

ஈரான் பேச்சுவார்த்தை குழுவில் உள்ளவர்களை இஸ்ரேல் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது என்று நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
4 மாதங்கள் தொடர்ந்த ஈரான்- அமெரிக்கா போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தையின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனிடையே கத்தார் தலைநகர் தோஹாவிலும் இரு நாட்டு குழுக்கள் கூடி இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரபூர்வமாக அல்லாமல் அமெரிக்கா- ஈரான் பிரதிநிதிகள் ரகசியமாக கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் பேச்சுவார்த்தை குழுவின் 2 முக்கிய பிரதிநிதிகளை கொலை செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பிரபல நாளேடான வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. முன்னதாக நியூ யார்க் டைம்ஸ் நாளேடும் இதுபோன்றதொரு செய்தி அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது வாஷிங்க்டன் போஸ்ட் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவி செய்து வரும் நாடுகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஈரான் குழுவில் இருக்கும் 2 முக்கிய தலைவர்களான அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் ஆகியோர் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலைகள் ஏதேனும் அரங்கேறினால், அது அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். எனவே ஈரானுக்கு இதுகுறித்து மத்தியஸ்தர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலத்தில் இருந்து வெளியான அறிக்கையில் "ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானின் மூத்த பேச்சுவார்த்தையாளர்களை இஸ்ரேல் குறிவைக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுவதாகக் கூறிய அமெரிக்க ஊடக அறிக்கையை இஸ்ரேல் வன்மையாக நிராகரிக்கிறது. மேலும், அந்த அறிக்கையை "போலிச் செய்தி", "உண்மையை முற்றிலுமாகத் திரித்துக் கூறப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது. நெதன்யாகுவும் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். இஸ்ரேல் லெபனான் மீது நடத்தும் தாக்குதல் அமெரிக்கா- ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால், நெதன்யாகுவை டார்கெட் செய்யும் வகையில் சில நேரங்களில் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.