search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மியான்மரில் ஆங் சான் சூகியின் சிறை தண்டனை குறைப்பு
    X

    மியான்மரில் ஆங் சான் சூகியின் சிறை தண்டனை குறைப்பு

    • ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 749 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    நோபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 78). அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. மேலும் 2½ ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் அந்த நாட்டின் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    புத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் புத்தர் முதன் முதலாக போதனை செய்த தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    அந்தவகையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 749 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பலரது மரண தண்டனை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் சிறை தண்டனையையும் தற்போது 27 ஆண்டுகளாக குறைத்து ராணுவ கவுன்சிலின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அங்கு விதிக்கப்பட்டு இருந்த அவசர நிலையும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×