அறுவை சிகிச்சை நடந்த நாளிலேயே பணிக்கு திரும்ப வற்புறுத்திய மேலாளர் - அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!

இந்த வேலையில் எப்படியாவது நிலைத்து நின்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
அறுவை சிகிச்சை நடந்த நாளிலேயே பணிக்கு திரும்ப வற்புறுத்திய மேலாளர் - அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!
Published on

அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்றைய தினமே, ஊழியர் ஒருவரை அவரது மேலாளர் வேலைக்கு வருமாறு வற்புறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபெருளாகியுள்ளது.

ரெடிட் பதிவு:

பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் பிரபல சமூக வலைதளப் பக்கமான ரெடிட்டின் (Reddit) 'r/jobs' என்ற ஃபோரமில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில், "கடந்த ஓராண்டாக நான் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. எனக்கு திடீரென அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை நடந்த அதே நாளிலேயே என்னை வேலை செய்யுமாறு என் முதலாளி கேட்டுக்கொண்டார்," என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல நட்சத்திரங்களுக்கு (Celebrities) மார்க்கெட்டிங் செய்யும் பிரிவில் பணியாற்றும் அந்த ஊழியர், இந்தத் துறை கடுமையான உழைப்பை கோரக்கூடியது மற்றும் மிக குறைந்த சம்பளம் மட்டுமே தரக்கூடியது என்று தெரிந்தே கடந்த ஆண்டு இந்த வேலையில் சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவரின் இடமாற்றம் மற்றும் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தனது ரெஸ்யூமில் (Resume) வேலைவாய்ப்பு இடைவெளிகள் (Gaps) இருந்ததால், இந்த வேலையில் எப்படியாவது நிலைத்து நின்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

13 டாலர்கள்:

மேலும் அந்த பதிவில், "நான் ஒரு முழு நாள் கூட விடுமுறை எடுத்ததே இல்லை. பயணங்களின் போது கூட தொடர்ந்து வேலை செய்து கொண்டுதான் இருந்தேன். வார இறுதி நாட்கள், காலை, இரவு என எந்நேரமும் அழைப்புக்கு தயாராகவே (On-call) வேலை பார்க்கிறேன். இதற்கெல்லாம் வரியைக் கழித்துவிட்டு எனக்குக் கிடைக்கும் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 13 டாலர்கள் (~₹1,000) மட்டுமே.

எனது ரெஸ்யூமில் இந்த அனுபவம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு மோசமான, அத்துமீறிய நடத்தைகளையும் சகித்துக் கொண்டு, குனிந்து கொடுத்து வேலை செய்கிறேன். ஆனால் இப்போது நான் மிகவும் சோர்ந்துபோய், மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ள அந்த ஊழியர், இன்னும் ஓராண்டுக்கு இந்த வேலையில் நீடிக்கலாமா வேண்டாமா என்ற கேள்வியோடு தனது பதிவை முடித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அவருக்கு எதிர்பாராதவிதமாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடந்த அன்றே, ஒரு முக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவரது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேறு வழியின்றி அந்த ஊழியரும் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆனால், அதற்குப் பிறகும் அவரது மேலாளர் தற்போது மிகவும் கண்டிப்புடன், பணிச்சுமையை ஏற்றி வற்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்த கடுமையான விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com