

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிலவி வந்த கடுமையான வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய தீவிர ஆலங்கட்டி மழை மற்றும் புயல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், பாரிஸின் அடையாளமான உலகப் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தின் உச்சியைப் பிரம்மாண்ட மின்னல் ஒன்று தாக்கிய அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலக அளவில் வைரலாகி வருகின்றன.
சம்பவத்தின் பின்னணி..
கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து, பிரெஞ்சு வானிலை ஆய்வு மையமான 'மெட்டியோ பிரான்ஸ்' பாரிஸ் மற்றும் அதன் அண்டை பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, நேற்று இரவு பாரிஸ் நகரை பயங்கர புயல் மற்றும் இடி, மழை சூழ்ந்தது. அப்போது நள்ளிரவில், வானத்தையே பிளப்பது போல தோன்றிய மின்னல் கீற்று, 1,063 அடி உயரமுள்ள ஈஃபில் கோபுரத்தின் உச்சியில் பாய்ந்தது.
இந்த அரிய மற்றும் மிரளவைக்கும் காட்சியை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகளும் தங்களது கேமராக்களில் துல்லியமாகப் பதிவு செய்த காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈஃபில் கோபுரம் எப்படி தப்பியது?
ஒரு லட்சம் வோல்ட் மின்சாரத் திறன் கொண்ட மின்னல் தாக்கிய போதிலும், ஈஃபில் கோபுரத்திற்கு எந்தவொரு சிறிய பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து பாதுகாப்பு வல்லுநர்கள் விளக்குகையில், "ஈஃபில் கோபுரம் அதன் உச்சிப் பகுதியில் அதிநவீன மின்னல் கடத்திகளைக் கொண்டுள்ளது.
இயற்பியலின் 'ஃபாரடே கூண்டு' தத்துவப்படி, இந்த இரும்பு கோபுரம் மின்னலின் அதிபயங்கர மின்சாரத்தை உள்வாங்காமல், அதன் வெளிப்புறக் கட்டமைப்பு வழியாக அப்படியே பாதுகாப்பாகப் பூமிக்குக் கடத்தி விடுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
ஈஃபில் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, இந்த கோபுரம் அதன் பிரம்மாண்ட உயரம் காரணமாக ஆண்டுக்குச் சராசரியாக 5 முதல் 10 முறை மின்னலால் தாக்கப்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான் என்று தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு..
பாரிஸ் மட்டுமின்றி சீன்-எட்-மார்ன், வெர்சாய்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று மாலை வரை நீடிக்கும் என்பதால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரான்சு அரசு அறிவுறுத்தியுள்ளது.