

மருத்துவர்கள் கட்டுப்படுத்த போராடி வரும் சுகாதார நெருக்கடி குறித்து அச்சமும் கோபமும் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு காங்கோவில் எபோலா நோய் சிகிச்சை மையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எபோலா நோய் பரவலின் மையமாக உள்ள நகரத்தில், உள்ளூர்வாசி ஒருவரின் உடலை மீட்க சென்றவர்கள் தடுக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள சிகிச்சை மையத்திற்கு மக்கள் தீ வைத்ததாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ருவாம்பாராவில் நடந்த தீ வைப்பு தாக்குதல் சம்பவம், இறுதி சடங்குகள் போன்ற உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் முரண்படக்கூடிய கடுமையான நடவடிக்கைகளை பயன்படுத்தி, அரிதான எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் சுகாதார பணியாளர்கள் சந்திக்கும் சவால்களை பிரதிபலிக்கிறது.
சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக உள்ள மற்றும் ஆயுத மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக பலர் இடம்பெயர்ந்து வரும் ஒரு பிராந்தியத்தில், இந்த நோய் பல வாரங்களாக பரவி வருகிறது.
எபோலாவால் இறப்பவர்களின் உடல்கள் அதிக தொற்றுத்தன்மை கொண்டவையாக இருப்பதாலும், மக்கள் உடல்களை அடக்கம் செய்ய தயார்ப்படுத்தும்போதும், இறுதி சடங்குகளுக்காக கூடும்போதும் நோய் மேலும் பரவக்கூடும் என்பதாலும், சந்தேகிக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களை புதைக்கும் அபாயகரமான பணியானது அதிகாரிகளால் இயன்றவரை நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்ய வாய்ப்பு மறுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்த கொள்கை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.
எபோலா நோயால் இறந்துவிட்டதாக தோன்றிய நண்பரின் உடலை மீட்க முயன்றபோது ஆத்திரமடைந்த உள்ளூர் இளைஞர்கள், ருவாம்பாராவில் உள்ள அந்த மையத்தை எரித்ததாக, அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தொலைபேசி மூலம் பேசிய ஒரு நபர் தெரிவித்தார்.
"நிலைமையைச் சமாதானப்படுத்த காவல்துறை தலையிட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களால் முடியவில்லை. இறுதியில் அந்த இளைஞர்கள் அந்த மையத்திற்குத் தீ வைத்துவிட்டனர். இதுதான் அங்குள்ள நிலைமை.," என்று அப்பகுதியில் இருந்ததாக கூறிய உள்ளூர் மாணவரான அலெக்சிஸ் புராட்டா கூறினார்.