

அணு ஆயுத ஆயுதங்கள் தொடர்பான செயல்களை மேம்படுத்தமாட்டோம் என்று ஈரான் உறுதிப்பூண்டுள்ளது. இதை வரவேற்பதாக தெரிவித்த சீனா, கூடிய விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள் என ஈரானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யி கூறுகையில் "ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான விவகாரத்தில், அந்த ஜலசந்தி வழியாக இயல்பான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து சர்வதேச சமூகம் ஒருமித்த கவலையை பகிர்ந்து கொள்கிறது. மேலும், சர்வதேச சமூகத்தின் இந்த கடுமையான வலியுறுத்தலுக்கு தொடர்புடைய தரப்புகள் (ஈரான்) கூடிய விரைவில் பதிலளிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. அதன்பின் முதன்முறையாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அர்காச்சி சீனா சென்றிருந்தார். அவரை வாங் யி சந்தித்து பேசினார். அதன்பின்னர்தான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு விரிவான போர் நிறுத்தத்தை எட்டுவது அவசர முன்னுரிமை என்றும், அதேவேளையில் மீண்டும் மோதல்களைத் தொடங்குவது அதைவிடவும் மிகவும் விரும்பத்தகாதது என்றும் சீனா கருதுகிறது என்றார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் "தற்போதைய சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான சிக்கலை துரிதமாக தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கலாம்" என்று ஈரான் அமைச்சர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
"ஈரான் தனது தேசிய இறையாண்மையையும் தேசிய கண்ணியத்தையும் உறுதியுடன் பாதுகாப்பதோடு, அமைதி பேச்சுவார்த்தைகள் வாயிலாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்து, ஒரு விரிவான மற்றும் நீடித்த தீர்வைத் தேடும்" என்று அர்காச்சி தெரிவித்துள்ளார்.