

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையில் இருந்த தொடர்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 2017-2019 காலகட்டத்தில் டிரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்க அரசுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை வலுப்படுத்த எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி நாடியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அனில் அம்பானி மற்றும் எப்ஸ்டீன் இருவரும் 'சிக்னல்' மற்றும் 'டெலிகிராம்' போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் உரையாடியுள்ளனர்.
இதில் அனில் அம்பானி 'Armani A' என்ற பெயரில் தனது அடையாளத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு உரையாடலில் "இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வெள்ளை மாளிகை தொடர்பான விவகாரங்களில் உங்கள் வழிகாட்டுதல் தேவை" என அனில் அம்பானி கோரியதற்கு, தான் "உள்விவகாரத் தகவல்களை" வழங்குவதாக எப்ஸ்டீன் பதில் அளித்துள்ளார்.
2017ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக டேவிட் பெட்ரியஸ் நியமிக்கப்படுவாரா என அனில் அம்பானி கேட்டதற்கு, அந்தப் பரிசீலனை இல்லை என எப்ஸ்டீன் முன்கூட்டியே தெரிவித்துள்ளார். பின்னர் கென்னத் ஜஸ்டர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2019ம் ஆண்டு அனில் அம்பானியின் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது, எப்ஸ்டீன் அவருக்குத் தொடர்ந்து ஆறுதல் செய்திகளை அனுப்பியுள்ளார்.
"நான் ஒரு நண்பனாக மட்டுமே ஆலோசனை கூறுகிறேன், எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
2019, மே 23 அன்று மான்ஹாட்டனில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் அனில் அம்பானி அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு நடந்த இரண்டு மாதங்களிலேயே மைனர் பெண்களைக் கடத்திய வழக்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
வெள்ளை மாளிகையில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அனில் அம்பானிக்கு எப்ஸ்டீன் உதவ முயன்றதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க அனில் அம்பானி தரப்பு மறுத்துவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கை:
முன்னதாக கோப்புகளை ஆய்வு செய்த ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றன.
எப்ஸ்டீனை சந்திக்க வேண்டும் என அவருக்கு மெசேஜ் அனுப்பிய அனில் அம்பானி, "உங்களது ஆலோசனை என்ன?" என்று கேட்கிறார்.
அதற்கு எப்ஸ்டீன், சந்திப்பை இன்னும் சுவாரஸ்யமாக்க "உயரமான ஸ்வீடிஷ் blonde பெண்" ஒருவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார். அதற்கு அனில் அம்பானி, "அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு மின்னஞ்சலில், ஜூன் 2017-ல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளை ஆகியோரைச் சந்திக்க எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி நாடியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஒப்புநோக்கத்தக்கது.