

நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் 21 மணி நேரம் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது. இதனால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே புதிய சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அல்லது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 16-ந்தேதி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு இரு தரப்பினரும் ஒப்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2-வது கட்ட பேச்சு வார்த்தையை இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவதற்கு அணுசக்தி விவகாரம்தான் முக்கியமானதாக இருந்தது. ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்காவும் ஈரானும் முன்மொழிவுகளைப் பரிமாறிக்கொண்டன.
இதில் தனது யுரேனியம் செறிவூட்டலை 5 ஆண்டுகள் வரை நிறுத்திவைக்க ஈரான் முன்மொழிந்தது. ஆனால் அதை நிராகரித்த அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அமைதி பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இனி ஈரான்தான் முடிவு எடுக்க வேண்டும். ஈரானியர்கள் எங்களை சந்திக்கத் தயாராக இருந்தால் இரு நாடுகளுக்கும் மிகவும் நல்ல ஒரு ஒப்பந்தமாக இது அமையும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அங்கே எங்களைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றால் அது அவர்களுடைய விருப்பம்.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதன் மூலம் அந்நாடு பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது என்றார்