

ஈரானில் கடந்த 1979-ஆம் அண்டு ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, பெண்கள் கடுமையான ஆடை விதிமுறைகளை பின்பற்றவும், பொது இடங்களில் தனியாக பாடுவதற்கும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2024 டிசம்பரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஈரான் தேசபக்தி பாடலை, இசைக்கலைஞர்களுடன் இணைந்து அந்நாட்டு பாடகி பரஸ்தூ அஹ்மதி, நேரலையில் பாடி யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார்.
அந்த காணொளி காட்சி வெளியான பிறகு, பாடகி அஹ்மதி மீது ஈரானிய அதிகாரிகள் சட்ட முறைப்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து ஈரான் கோம் மாகாண குற்றவியல் நீதிமன்றம் பாடகியின் தலை, கழுத்து மற்றும் தோள்கள் வெளிப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி, கட்டாய ஹிஜாப் அணியாமல் நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம்சாட்டியது.
மேலும் ஈரான் பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனையுடன் எந்தவோரு கலைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.
ஈரான் குற்றவியல் நீதிமன்ற உத்தரவிற்கு மனித உரிமைகள் பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் செத்தாரே மலேகி கூறுகையில், "பரஸ்தூ அஹ்மதியின் யூடியூப் வீடியோவைப் பார்த்தபோது, அது எனக்குள் இருந்த எதிர்ப்பு உணர்வை மீண்டும் தூண்டியது.
பல நாட்களாக, நான் அந்த வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன், மேலும் பரஸ்தூவை நினைத்து நான் மிகுந்த பெருமை அடைந்தேன்," என்று அவர் கூறினார்.
மனித உரிமை பரப்புரை இயக்குநர் பஹாரி கந்தேஹரி கூறுகையில், “ஈரான் குற்றவியல் சட்டத்தின் கீழ், பெண்கள் பாடுவது, இசை நிகழ்த்துவது மற்றும் இசைப் படைப்புகளை உருவாக்குவது பரப்புவது ஆகியவை குற்றமாகக் கருதப்படவில்லை.
ஆகையால், அத்தகைய செயல்பாடுகளை ஆபாசமான உள்ளடக்கத்தை உருவாக்குதல், விநியோகித்தல், வெளியிடுதல் என நியாயமாகப் பொருள் கொள்ள முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார்.