

மியான்மரில் புத்தாண்டு (திங்யான்) கொண்டாட்டத்தை முன்னிட்டு 4,335 கைதிகளை அந்நாட்டு அரசு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது.
பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும், ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு அது 40 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களில் 179 வெளிநாட்டினரும் அடங்குவர். இவர்கள் உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
அண்மையில் மியான்மரின் அதிபராகப் பொறுப்பேற்ற மின் ஆங் ஹ்லைங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2021-ஆம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மைண்ட் மீதான குற்றச்சாட்டுகளும் மன்னிக்கப்பட்டு, அவரும் விடுவிக்கப்பட்டார் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் ஜனவரியில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தின்போதும், ஏப்ரலில் கொண்டாடப்படும் புத்தாண்டின்போதும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றன.