Iran War | ஈரான் கிடுக்குப்படியால் வளைகுடாவில் சிக்கித்தவிக்கும் 1500 கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முற்றுகையை தூண்டியது.
Iran War | ஈரான் கிடுக்குப்படியால் வளைகுடாவில் சிக்கித்தவிக்கும் 1500 கப்பல்கள்
Published on

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்துள்ள தடை காரணமாக, சுமார் 1,500 கப்பல்களும் அவற்றின் மாலுமிகளும் வளைகுடாவில் சிக்கியுள்ளதாக, ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் பனாமாவில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக தொடுத்த மத்திய கிழக்கு போர், அப்பகுதி முழுவதும் தெஹ்ரானின் பதிலடி நடவடிக்கைகளையும், முக்கியமான உலகளாவிய வர்த்தக பாதையான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முற்றுகையை தூண்டியது.

"தற்போது, ​​ஏறத்தாழ 20,000 மாலுமிகளும், சுமார் 1,500 கப்பல்களும் சிக்கியுள்ளன," என்று அர்செனியோ டொமிங்கஸ் அமெரிக்காவின் கடல்சார் மாநாட்டில் தெரிவித்தார். உலகில் நுகரப்படும் மொத்த பொருட்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல்வழி போக்குவரத்தின் மூலமே நடைபெறுகின்றன என்று டொமிங்கஸ் கூறினார்.

"சிக்கித் தவிக்கும் பணியாளர்கள், 'பிற நாடுகளின் நலனுக்காக தினமும் தங்கள் பணிகளை செய்யும் அப்பாவி மக்கள். ஆனால், தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட புவிசார் அரசியல் சூழ்நிலைகளால் அவர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்'," என்று டொமிங்கஸ் கூறினார்.

மோதல் வெடிப்பதற்கு முன்பு, உலகின் மொத்த பெட்ரோலியம் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாக சென்றது. இந்த நீரிணை மூடப்பட்டதால், ஹைட்ரோ-கார்பன்களின் விலையில் உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.

சிக்கியுள்ள கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், நீரிணையை திறக்க கட்டாயப்படுத்தவும் ஒரு கடற்படை நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த முயற்சியை கைவிட்டார்.

போரை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதிலுக்காக அமெரிக்கா தற்போது காத்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com