சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன்?: தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன்? என்பதற்கு தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன்?: தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி
Published on

ஆண்டிப்பட்டி:

தமிழக சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேச அனுமதி அளிக்க வில்லை என்று கூறி ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிநடப்பு செய்தார். இது ஆளும் கட்சிலும் எதிர்கட்சி மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தர்மத்துப் பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

ஆனால் அந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது குறித்து அன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை கேள்வி ஒன்றை எழுப்ப முயன்றேன். பேரவையில் இதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தவரை என்னை சட்டசபையில் பேச விடாமல் செய்தார். அவர் கட்சியை விட்டு தற்போது விலகி உள்ள நிலையிலும் சட்டமன்றத்தில் என் தொகுதி பிரச்சினை குறித்து பேசகூட அனுமதி வழங்க வில்லை என்றால் நான் எதற்காக பேரவையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெளிநடப்பு செய்தேன்.

அதன்பிறகு அமைச்சர்கள் என்னிடம் பேசி எனது கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் இன்றைய கூட்டத்தொடரில் கலந்து கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விவாதிக்க பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெங்களூரில் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினார். அன்று மாலைதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளார்.

எனவே இது சசிகலாவின் அறிவுறுத்தலின்பேரில்தான் நடந்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ள அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத்கோவிந்துக்கு வாக்களிப்போம்.

கட்சியில் டி.டி.வி. தினகரன் பணியாற்ற விரைவில் முடிவு செய்துள்ளார். 60 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில் தீவிர கட்சி பணியில் அவர் இறங்குவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com