

புதுடெல்லி:
ஸ்மார்ட்போன்களில் வங்கி சேவை அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகிவிட்டது. இதைத் தொடர்ந்து வங்கி கணக்குகளிடையே பண பரிமாற்றம் செய்யும் வசதியை பல்வேறு செயலிகள் வழங்கி வருகின்றன. இதுதவிர குறுந்தகவல் செயலிகளிலும் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
சமீபத்திய ஹைக் அப்டேட்டில் யு.பி.ஐ. மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் துவங்கியுள்ளது. அதன்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தேசிய பணம் செலுத்தும் அமைப்பு, மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தைகளை வாட்ஸ்அப் துவங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு முன்னணி வங்கிகளுடன் வாட்ஸ்அப் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது என்றும் இதன் பின் யு.பி.ஐ. முறையை செயலியில் வழங்குவதற்கான பணிகள் துவங்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) யு.பி.ஐ மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை கொண்டு இரு வங்கி கணக்குகளிடைய உடனுக்குடன் பண பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.
உடனுக்குடன் பண பரிமாற்றத்திற்கு யு.பி.ஐ. வழி செய்யும் நிலையில் வங்கிகள் தங்களது அமைப்புகளை வாட்ஸ்அப் உடன் இணைத்து சரியான கணக்குகளை தேர்வு செய்யும். பணம் அனுப்பப்பட வேண்டியவரை வாட்ஸ்அப் சரியாக கண்டறிந்த பின் யு.பி.ஐ. பணம் அனுப்புவதற்கான அனுமதியை வழங்கும்.
இதேபோன்ற தொழில்நுட்பம் ட்ரூகாலர் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்றங்கள் மேற்கொள்ள வழி செய்துள்ளது. ஹைக் மெசன்ஜர் செயலியில் எஸ் பேங்க் உடன் இணைந்து யு.பி.ஐ. பண பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
குறுந்தகவல் செயலிகளில் பணம் அனுப்புவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற வேண்டும். குறுந்தகவல் செயலிகளில் பண பரிமாற்றம் செய்யும் வசதிகள் வங்கிகளிடையே பாதுகாப்பு சார்ந்த விஷங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பண பரிமாற்றம் செய்வதற்கு ஏற்ப பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆதார் முறையில் பண பரிமாற்றம் செய்யப்படும் போது பயோமெட்ரிக் தேவைப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.