வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப்போற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப்போற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய நாட்டுப்பற்றுக்கும், விடுதலை வேள்வித் தியாகத்துக்கும், வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குணத்துக்கும், அடக்கு முறைக்கு அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் இன்று.

அடுத்த ஆண்டு 150-வது பிறந்தநாள் வர இருக்கிறது. இன்றும் நம் நெஞ்சில் நிறைந்து வாழும் மாபெரும் மனிதராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த மறக்கவியலாத தியாகங்கள் தான். இந்திய நாட்டு விடுதலைக்காக மட்டுமல்ல, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டும் மகத்தானது. சிறையில் அடைக்கப்பட்ட காலம் தொடங்கி இறுதிவரை தமிழுக்கு ஏராளமான நூல்களை எழுதி உள்ளார். மறைவுக்கு முந்தைய ஆண்டு திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டார்.

வ.உ.சிதம்பரனாருக்கும் திராவிட இயக்கத்துக்குமான தொடர்பு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. “வ.உ.சிதம்பரனாரை பார்த்தே நான் பொதுத்தொண்டில் ஈடுபடத் தொடங்கினேன்” என்று தந்தை பெரியார் பேசியுள்ளார்கள்.

வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவியபோது, தந்தை பெரியார் நிதி வழங்கியுள்ளார். தங்கள் பகுதியில் இருந்து நிதி திரட்டியும் தந்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதில் வ.உ.சி.யும் பெரியாரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். சமூகநீதியை 1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு சென்றதும் வ.உ.சி.யும் பெரியாரும் தான். இறுதிக்காலம் வரை சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளார் வ.உ.சி.

1972-ம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியவர் முதல்வர் கலைஞர். அதே ஆண்டு தான் இந்திய நாடும் தனது 25-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்குச் சிலை அமைத்த முதலமைச்சர் கலைஞர், அதனைத்திறந்து வைக்கப் பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து வந்திருந்தார்.

உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப்போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com