

சிம்லா:
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது.
இதற்கிடையே ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் குஜராத்திலும், இமாச்சலபிரதேசத்திலும் பா.ஜனதாவே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும் தனியார் டெலிவிஷன்கள் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு மோசமானது என்று அம்மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி வீரபத்ரசிங் குற்றம் சாட்டியுள்ளார்.
2012-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது போல இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பா.ஜனதா வெற்றி பெறும் என சில டெலிவிசன் சேனல்கள் தெரிவித்துள்ளன. இது மோசடியானது.
பா.ஜனதாதான் இந்த மோசடிக்கு எல்லாம் காரணமாகும். அவர்கள் தங்கள் சொந்த கணக்கீட்டை கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வீரபத்ரசிங் கூறியுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் சுக்வீந்தர்சிங் கூறும் போது, “ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பல்வேறு முறை தவறாக இருந்து உள்ளது. இது நிரூபணமாகி இருக்கிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். ஆட்சியை மீண்டும் கைப்பற்றும்” என்றார்.
அதே நேரத்தில் இமாச்சலப் பிரதேச காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பதாக கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மூத்த தலைவர்கள்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.