

பெரம்பலூர்:
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 65). இவர், தனது மனைவி லீலா(63) மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். வேனை சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார் (40) ஓட்டினார்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அந்த வேன் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த ஜெயராமன், அவருடைய மனைவி லீலா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேன் டிரைவர் சுரேஷ்குமார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சுரேஷ்குமார், ஜெயராமன், லீலா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார், லீலா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆரோக்கியதாசிடம் (47) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews