

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரின் 32-வது வார்டில் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், அகமது நகரின் ஷாஹுநகர் பகுதியில் நேற்று மாலை சிவசேனா கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். குண்டு காயங்களுடன் இருவரும் கீழே சுருண்டு விழுந்தனர். இதையடுத்து, பைக்கில் வந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த உள்ளூர் தலைவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். உள்ளூர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கோட்கர் (35), மற்றும் வசந்த் ஆனந்த் துபே (40) என்பதும், உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews