

நெ.1.டோல்கேட்:
லால்குடியில் இருந்து நெல் மூட்டை ஏற்றப்பட்ட ஒரு லாரி இன்று அதிகாலை அரவைக்காக மணப்பாறை நோக்கி சென்றது. லாரியின் முன் பகுதியில் டிரைவருடன் கூலி தொழிலாளர்கள் 7 பேர் அமர்ந்து இருந்தனர்.
லாரி இன்று அதிகாலை 3 மணிக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ் சாலையில் நெ.1.டோல் கேட் அருகே உள்ள தாளக்குடி என்ற இடத்திற்கு வந்தது. அங்கு விவசாய தானியங்களுக்கான சுங்கவரி செலுத்தும் அலுவலகம் உள்ளது. அங்கு சுங்கவரி செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் லாரியை விரட்டி சென்றனர்.
பின்னர் அதேபகுதியில் லாரியை மடக்கி சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவரை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றனர். உடனே லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் கீழே இறங்கி நின்றனர். அப்போது டால்மியாபுரத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக நெல் மூட்டை இருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்த கூலி தொழிலாளி கரூர் மாவட்டம் வீரப்பூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்தும் கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த தொழிலாளியும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.