எடப்பாடி, 2 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு

எடப்பாடி, 2 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு

எடப்பாடி, 2 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரனைக்கு உகந்ததா? என நாளை தெரிவிக்கப்படும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Published on

மதுரை:

சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 420-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது, அமைச்சர் காமராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் மூவரையும் அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக கவர்னருக்கு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என நாளை தெரிவிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை (22-ந்தேதி)க்கு ஒத்தி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com