

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய், அனைத்திந்திய புரட்சி தலைவர் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து உருவாக்கிய தேர்தல் கூட்டணியும் இந்தமுறை களம் காண்கின்றன. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிற 18-ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் தமிழ்நாடு தேர்தல் பிரசார திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழ்நாடு வருவதாகவும், இங்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.